கரன் தாப்பர்: சமீபத்தில் சில பத்திரிகை மற்றும் டீவி ஆசிரியர்களை சந்தித்தபோது, ‘மீடியா பொறுப்பில்லாமல் செயல்படுகிறது‘ என்று வருத்தப்பட்டீர்கள். மீடியாவின் செயல்பாடு உங்களுக்கு ஏமாற்றம் தருகிறதா?
மார்கண்டேய கட்ஜு: ரொம்ப ஏமாற்றம் அளிக்கிறது.
உங்களுக்கு மீடியா பற்றி நல்ல அபிப்பிராயம் இல்லையா?
நிச்சயமாக இல்லை.
உண்மையாகவா சொல்கிறீர்கள்?
உண்மையாகவே எனக்கு மீடியா பற்றி நல்ல அபிப்பிராயம் இல்லை. மக்கள் நலனுக்காக மீடியா பணியாற்ற வேண்டும். ஆனால் அவர்கள் அப்படி இல்லை. சில நேரங்களில் மக்கள் நலனுக்கு எதிராக செயல்படுவதையும் பார்க்கிறேன்.
உண்மையான தகவல்களை பாரபட்சம் இல்லாத முறையில் வழங்குவது மீடியாவின் கடமை என்று அந்த சந்திப்பில் குறிப்பிட்டீர்கள். மீடியா நேர்மையாக செயல்படவில்லையா, அல்லது அது போதுமானதாக இல்லையா?
ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவின் வரலாற்றில் ஒரு மாற்றம் நேர்ந்து கொண்டிருக்கிறது. நில பிரபுத்துவ வேளாண் சமூகமாக இருந்த இந்தியா இன்றைக்கு நவீன தொழில்சார் சமுதாயமாக மாறும் காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். இது வலிகள் மிகுந்த காலகட்டம். முன்பு ஐரோப்பா இதே மாற்றத்தை சந்தித்த நேரத்தில், மக்களுக்கு அந்த வலியை குறைக்கும் வகையில் அங்குள்ள மீடியா செயல்பட்டது.
இந்தியாவில் அப்படி நடக்கவில்லை என்கிறீர்களா?
இங்கே அதற்கு தலைகீழாக நடக்கிறது. ஐரோப்பாவில் ரூசோ, தாமஸ் பய்ன், திதரோ மாதிரி எழுத்தாளர்கள் மக்களை மாற்றத்துக்கு தயார் செய்தார்கள். ‘இந்த நாட்டிலுள்ள கடைசி சாமியாரின் குடலை உருவி அதை கடைசி மன்னனின் கழுத்தில் சுருக்கிட்டு தொங்கவிடும் வரையில் மக்களுக்கு சுதந்திரம் கிடைக்காது‘ என்று முழங்கினான் பிரஞ்சு சிந்தனையாளன் திதரோ.
அவர்களோடு ஒப்பிட்டால் இந்தியாவின் வரலாற்று மாற்றத்துக்கு நமது மீடியாவின் பங்களிப்பு எப்படி?
இந்திய மீடியா பெரும்பாலான நேரங்களில் மக்களுக்கு எதிரான நிலை எடுப்பதை பார்க்கிறேன். மூன்று விஷயங்களை உதாரணம் காட்டலாம். முதலாவது, பற்றி எரியும் உண்மையான பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை மீடியா திசை திருப்புகிறது. இங்கே பிரச்னைகள் எல்லாமே பொருளாதார அடிப்படையிலானவை. நம் மக்களில் இன்னமும் 80 சதவீதம் பேர் வறுமை, வேலையின்மை, விலைவாசி, நோய்களால் பாதிக்கப்பட்டு வாழ்க்கை நடத்துகின்றனர். அந்த பிரச்னைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து தீர்வு காண தூண்டாமல், பிரச்னைகளில் இருந்து திசை திருப்புகிறது மீடியா. சினிமா நட்சத்திரங்கள், அழகி போட்டி, கிரிக்கெட் மாதிரியான சமாசாரங்களை பெரிதுபடுத்தி நாட்டுக்கு அத்தியாவசியமானது அந்த விஷயங்கள்தான் என்பதுபோல் ஒரு பிரமையை உண்டாக்குகிறது.
ஃபேஷன், சினிமா, கிரிக்கெட் மேட்டரை மக்களுக்கு போதையேற்ற மீடியா பயன்படுத்துகிறது என்கிறீர்கள்?
ஆமாம். கிரிக்கெட் நமது ஜனங்களுக்கு ஒரு போதை பொருள் & ஓப்பியம் & மாதிரி. ரோமாபுரி பேரரசன் சொல்வானாம், ‘மக்களுக்கு ரொட்டி கொடுக்க வழியில்லை என்றால் சர்க்கஸ் பார்க்க ஏற்பாடு செய்‘ என்று. இந்தியாவில் மக்களுக்கு தேவையானதை கொடுக்க முடியாவிட்டால் அவர்களை கிரிக்கெட் பார்க்க வைக்கிறோம். நிறைய சேனல்களில் இரவு பகல் எந்த நேரமும் ஏதாவது கிரிக்கெட் மேட்ச் ஓடிக் கொண்டே இருக்கிறது & அதுதான் நாட்டின் ஒரே பிரச்னை மாதிரி.
மக்கள் விரோதமாக மீடியா செயல்படுவதை காட்டும் இன்னும் இரண்டு விஷயங்கள் என்னென்ன?
இரண்டாவது, அநேக நேரங்களில் மக்களை பிளவுபடுத்துகிறது மீடியா. இங்கே பலதரப்பட்ட மக்கள் வாழ்கிறார்கள். ஒருவரை ஒருவர் மதித்தால்தான் ஒற்றுமையாக நிம்மதியாக வாழ முடியும். ஆனால் என்ன நட க்கிறது? ஒரு ஊரில் குண்டு வெடித்தால் போதும். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் ‘குண்டு வைத்தது நாங்கள்தான் என்று இந்தியன் முஜாஹிதின் கூறுகிறது‘ அல்லது ‘ஜய்ஷ் இ முகமத் அல்லது ஹர்கத் உல் ஜிஹாத் அமைப்பு கூறுகிறது‘ என்று ஏதோ ஒரு முஸ்லிம் பெயரை சேனல்கள் சொல்கின்றன. அதற்குள் எப்படி தெரியும் என்றால் எஸ்எம்எஸ் வந்தது, இமெயில் வந்தது என்று காட்டுகிறார்கள். எஸ்எம்எஸ், இமெயில் எல்லாம் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் அனுப்ப முடியும். யாரோ ஒரு விஷமி அனுப்பியிருக்கலாம். அதை பெரிதாக டீவியில் காட்டி மறுநாள் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கும்போது என்ன ஆகிறது? முஸ்லிம்கள் எல்லாரும் குண்டு வைப்பவர்கள், தீவிரவாதிகள் என்று ஒரு மதத்தையே ஒட்டுமொத்த அசுரர்கள் மாதிரி சித்தரிக்கிறது மீடியா. எந்த மதமாக இருந்தாலும் 99 சதவீதம் பேர் நல்லவர்கள் என்பதுதான் உண்மை.
மீடியா இந்த விஷயத்தில் கேர்லசாக நடக்கிறது, தகவல் உண்மையா என்பதை செக் பண்ணாமல் செய்தி வெளியிடுகிறது என்கிறீர்களா அல்லது வேண்டுமென்றே அப்படி செய்வதாக நினைக்கிறீர்களா?
மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த மீடியா வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன். நிச்சயமாக இது நாட்டு நலனுக்கு எதிரானது.
மீடியா வேண்டுமென்றே மக்களுக்குள் பிளவை உண்டாக்குவதாகவா சொல்கிறீர்கள்?
குண்டு வெடித்த சிறிது நேரத்தில் எஸ்எம்எஸ் வந்தது இமெயில் வந்தது என்பதை சாக்கிட்டு ஒரு மதத்தையே வில்லனாக மீடியா சித்தரிக்கும்போது அதற்கு வேறென்ன அர்த்தம் கொடுக்க முடியும்?
மீடியாவின் மக்கள் விரோத நிலைப்பாடுக்கு மூன்றாவது உதாரணமாக எதை சொல்ல போகிறீர்கள்?
ஒரு ஃபியூடல் சொசைட்டி மாடர்ன் சொசைட்டியாக மாறுகிற காலகட்டத்தில் அந்த மக்களும் நாடும் முன்னேற்ற பாதையில் செல்வதற்கு அறிவியல் சிந்தனை பரவ வேண்டும். அதற்கு மீடியா உதவ வேண்டும். ஐரோப்பாவில் நடந்ததை சொன்னேன். இங்கே என்ன நடக்கிறது? அறிவியல் சிந்தனையை தூண்டுவதற்கு பதில் ஜோசியம், மூடநம்பிக்கை போன்ற அறிவியலுக்கு எதிரான விஷயங்களை பரப்புகிறது மீடியா. ஏற்கனவே நமது நாட்டில் 80 சதவீத மக்கள் ஜாதி, மதம், மூடநம்பிக்கை போன்ற விஷயங்களில் சிக்கி மனரீதியாக பின்தங்கி நிற்கிறார்கள். அவர்களை அந்த மாயைகளில் இருந்து விடுவித்து ஒரு மேம்பட்ட சிந்தனை வட்டத்துக்கு கொண்டுவர, முற்போக்கான எண்ணங்கள் உருவாக மீடியா தூண்டுதலாக இருக்க வேண்டுமா, வேண்டாமா? ஆனால் மக்களை இன்னும் மடையர்களாக்கும் வேலையை நமது மீடியா செய்கிறது. பல சேனல்களில் பெரும்பாலான நேரம் ஜோசியம் ஓடுகிறது. இன்றைக்கு நீங்கள் இந்த கல் மோதிரம் போட வேண்டும், இன்ன கலர் சட்டை அணிந்தால் நீங்கள் இறங்கும் காரியம் வெற்றி என்றெல்லாம் அபத்தமாக சொல்லி மக்களின் மூளையை மழுங்கடிக்கிறார்கள். என்ன பேத்தல் இது!
நன்றி - தினகரன் நாளிதழ் 02.11.2011

0 comments:
Post a Comment